அடுத்த அஸ்திரத்தை கையிலெடுத்த பாஜகவின்…!

Spread the love

”என்னதான் மக்களுக்குப் பிடித்தமான நல்லாட்சியைக் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைமை நினைத்தாலும் யதார்த்தம் அப்படி இல்லை. சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது என்பது போல் அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறது திமுக அரசு. அதில் லேட்டஸ்ட் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்!

திமுக ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக சங்கநாதம் எழுப்பிக் கொண்டே இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை ராஜ்பவன் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு ஆற்றிய எதிர்வினையில், ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு உதாரணமாக சரித்திரத்தில் நிகழாத வகையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இனி, தமிழக அரசையும், போலீஸாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என கடவுளை மட்டுமே வேண்டிக்கொள்ள வேண்டும்” என்று தாக்கினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆளுநர் ரவி, தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்றபோது சில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி கான்வாயில் கருப்புக் கொடியை வீசின. அப்போதும் அதை பெரும் பிரச்சினையாக உருவாக்கினார் அண்ணாமலை. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு சீர்குலைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

இதுமட்டுமல்ல… மணல் கொள்ளையர்கள் விஏஓ-க்களை தாக்கிய சம்பவம், சொந்தப்பகை காரணமாக பாளையங்கோட்டையில் நடந்த கொலை, குடிவெறியில் சென்னையில் நடந்த இரட்டைக் கொலை அனைத்தையும் அரசுக்கு எதிராக சித்தரித்த அண்ணாமலை, இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்ற தனது வாதத்தை அழுத்தமாக பதியவைக்கும் வேலைகளை தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ராஜ்பவன் பெட்ரோல் குண்டு வீச்சு, பாஜக கொடிக்கம்பம் அகற்றல், பாஜகவினர் மீதான கைது நடவடிக்கை, சென்னிமலை விவகாரம் இதையெல்லாம் மிகப்பெரிதாக உருவகப்படுத்தி தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று நிறுவுவதற்கு அண்ணாமலையும் பாஜகவினரும் ரொம்பவே மெனக்கிடுகிறார்கள்.

அண்ணாமலை எதிர்க்கட்சிக்காரர். அவர் அப்படித்தான் அரசியல் செய்தாக வேண்டும். ஆனால், அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கிவருவதுதான் தவறு என்கிறார்கள் திமுகவினர். ரவுடி கருக்கா வினோத் வீசிய பெட்ரோல் குண்டு ராஜ்பவன் காம்பவுண்ட் சுவரோரம் பேரிகார்டு அருகே விழுந்தது. ஆனாலும் அதில் எக்ஸ்ட்ரா பிட் சேர்த்து, ‘ஆளுநர் மாளிகை மீது வெடிகுண்டு வீச்சு, வெடிகுண்டுகளுடன் ஆளுநர் மாளிகைக்குள் இருவர் நுழைய முயற்சி’ என அறிக்கை வாசித்தது ஆளுநர் மாளிகை. அதற்கு அண்ணாமலையும் பின்பாட்டுப் பாடினார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற நாளிலிருந்தே அரசுக்கு எதிரான இது மாதிரியான சர்ச்சைகளை தொடுத்து வருவதாகச் சொல்லும் திமுகவினர், “மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை கண்காணிக்க வேண்டிய ஆளுநரே அதை சீர்குலைக்கும் மறைமுக காரணியாக திகழ்கிறார். ஆளும் கட்சி, திமுக கொள்கை, தமிழகத்தின் பாரம்பரியம், தொன்மை, வரலாறு ஆகியவற்றின் மீதான தனது கருத்தை பொதுவெளியில் வலிய திரித்துப்பேசி அதன்மூலம் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார். அதனால் அவர் சுற்றுப்பயணம் செல்லும்போது, சம்பந்தப்பட்டவர் கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். அதைச் சுட்டிக்காட்டி சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர் புகார் வாசிக்கிறார். அவர் சொல்வதை அப்படியே பிடித்துக்கொண்டு அண்ணாமலையும் அதே ராகத்தைப் பாடுகிறார்.

உண்மையைச் சொல்லப் போனால், பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நன்றாகவே பராமரிக்கப்படுகிறது. தவறு செய்பவர்கள் திமுககாரர்களாகவே இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆக, உண்மையில் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிகிறது. ஆளுநரும் அண்ணாமலையும் தான் அரசியல் செய்கிறார்கள்”என்கிறார்கள்.

ஆளுநரும் பாஜகவும் அரசுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் சட்டம் – ஒழுங்கு ஆயுதம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், “தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை வேகமாக வளர்த்தெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ரவி ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு பின்னால் இருந்து இதுபோன்ற சீர்குலைப்பு வேலைகளை செய்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ அங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது தமிழ்நாட்டில் நடக்காது” என்று சொல்லி இருக்கிறார்.

பாஜகவின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு பிரச்சாரம் குறித்து வழக்கறிஞரும் திமுக பேச்சாளர் தமிழன் பிரச்சன்னாவிடம் கேட்டோம். “பாஜகவினருடன் சேர்ந்துகொண்டு ஆளுநரும் தமிழக சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அஞ்சலையில் ஆரம்பித்து படப்பை குணா வரையிலும் மிகமோசமான குற்றச்செயல்கள் புரிகிறவர்களை பாஜகவில் அவர்கள் சேர்த்துக்கொண்டுள்ளதே தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையைச் செய்வதற்காகத் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் முன்பைவிட குற்றங்கள் குறைந்திருக்கிறது. எந்த குற்றமாயினும், அதில் குற்றம்புரிகிறவர்கள் யாராயினும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிற, மக்கள் நலத்திட்டங்களை அதிகமாக செயல்படுத்துகிற, முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்துகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களையும், சதிகளையும் முறியடித்து மேலும் சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தருவார்” என்றார் அவர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்
வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளை உண்டாக்கி அதன் மூலம் அதிகாரத்தைப் பிடிக்கும் உத்தியை சில கட்சிகள் கையாண்டு வருகின்றன. பாஜக இந்த உத்தியை அதிகம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டும் உண்டு. தமிழகத்தில் பாஜக அதிகாரத்தைப் பிடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படும் நிலையில், இங்கேயும் அத்தகைய உத்தியைக் கையில் எடுத்துப் பார்க்கிறது பாஜக என்கின்றன திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்.

அதேசமயம், சட்டம் – ஒழுங்கு சீர்குலையாமல் பராமரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கட்டாயம் மாநிலத்தை ஆளும் அரசுக்கு உள்ளது. அத்தகைய கடமையும் பொறுப்பும் அந்த மாநிலத்தின் ஆளுநருக்கும் உண்டு. அப்படி இருக்கையில், அரசு நிர்வாகத்துக்குச் சம்பந்தமில்லாத கருத்துகளை பேசும்போதும் எழுதும்போதும் ஆளுநராக இருப்பவர்கள் மிகுந்த பொறுப்புணர் வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அதைவிடுத்து, அரசியல்வாதிகள் கணக்காய் ஆளுநர்களும் அனைத்துக்கும் எதிர்க்கருத்துச் சொல்ல ஆரம்பித்தால் சட்டம் – ஒழுங்கு மாத்திரமல்ல… அரசு நிர்வாகமே ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் முடங்கிப் போகும். அது, மக்கள் மத்தியில் அரசுக்கு அனுதாபத்தைத்தான் உண்டாக்கும். ஆளுநரும் அண்ணாமலையும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா?


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours