டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி அணி வகுத்து வரும் நிலையில் பவனா ஸ்டேடியத்தை சிறைச்சாலையாக மாற்ற கோரிய மத்திய அரசின் முன்மொழிவை டெல்லி அரசு நிராகரித்தது.
டெல்லியை நோக்கி பேரணி :
குறைந்தபட்ச ஆதரவு விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லியை நோக்கி பேரணி போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதில், சம்யுக்த கிசான் மோர்ச்சா , கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இந்த விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியை நோக்கி டிராக்டரில் இன்று பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர்.
இரண்டு கட்ட பேச்சுவார்த்தை :
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த ராய் ஆகியோர் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆம் ஆத்மி அரசு நிராகரிப்பு :
ஆனாலும், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பவனா ஸ்டேடியத்தை சிறைச்சாலையாக மாற்றுமாறு, டெல்லி மாநில அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதும், அதனை ஆம் ஆத்மி அரசு நிராகரித்ததும் தெரியவந்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கை :
இது தொடர்பாக டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ள பதிலில், “விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. ஒவ்வொரு குடிமகனும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே விவசாயிகளை கைது செய்வது தவறானது.
பேச்சுவார்த்தை :
இதற்குப் பதிலாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண்பதற்கு மத்திய அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் நாட்டிற்கு உணவு கொடுப்பவர்கள். அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது அவர்களின் காயத்தின் மீது உப்பைத் தேய்ப்பது போன்றதாகும். மத்திய அரசின் இந்த முடிவில் பங்குதாரராக இருக்க எங்களால் முடியாது. எனவே, பவனா ஸ்டேடியத்தை சிறைச்சாலையாக மாற்றும் அனுமதி கொடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours