புதிய சிம் கார்டு வாங்கினால் அல்லது அது மோசடிக்காரர்களால் முடக்கப்பட்டிருந்தால், மற்றொரு மொபைல் போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான கால அவகாசம், 10 நாளில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவையில் இருந்து, நம் மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறொரு சேவை நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் திட்டம், ‘மொபைல் போர்டபிளிட்டி’ என அழைக்கப்படுகிறது.
பழுதடைந்தது, தொலைந்தது என பல காரணங்களால் ஒருவேளை புதிய சிம் வாங்கியிருந்தால், மொபைல் போர்டபிளிட்டி செய்வதற்கு, 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், மொபைல் போன் மோசடிக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட மொபைல் போனை ‘ஸ்வாப்’ எனப்படும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இந்த மோசடிக்காரர்கள், குறிப்பிட்ட நபரின் மொபைல் எண்ணுக்குள் நுழைந்து தகவல்களை திருடி, சேவை அளிக்கும் நிறுவனத்திடம், புதிய சிம் பெற்றுக் கொள்கின்றனர். அதை பயன்படுத்தி, அவர்கள் போர்டபிளிட்டி செய்து, வேறொரு சேவை நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த தகவல்களை வைத்து, குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடுகின்றனர். இந்த மோசடி தற்போது அதிகளவில் நடந்து வருகிறது.
இதைத் தடுக்கும் வகையில், மொபைல் ஸ்வாப் அல்லது புதிய சிம் வாங்கிய பின், மற்றொரு சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான காலத்தை குறைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
மோசடிகளை தடுக்கும் வகையிலும், பயனாளிக்கு உதவும் வகையில், தற்போதுள்ள 10 நாட்கள் என்ற அவகாசத்தை, ஏழு நாட்களாக குறைத்து, ‘டிராய்’ எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
+ There are no comments
Add yours