சென்டிமெண்ட் சமச்சாரங்களை ஃபாலோ பண்ணும் அரசியல்வாதிகள் !

Spread the love

சினிமாவிலும் அரசியலிலும் ரொம்பவே முக்கியமான சமாச்சாரம் சென்டிமெண்ட். வெற்றி படங்களுக்காக பூஜை நடந்த கோவில், உடன் பணியாற்றுபவர்கள், பயன்படுத்தும் கார், பேனா என பலரும் ஒரே மாதிரி விசயங்களை சென்டிமெண்டாக பயன்படுத்துவது அதிகம்.

அதே போல, வீட்டை விட்டு வெளியே செல்லும் போதே சென்டிமெண்ட் சமச்சாரங்களை ஃபாலோ பன்னுபவர்கள் அரசியலிலும் அதிகம். அதுவும் தேர்தல் நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். பூனை குறுக்கே போவது போல கனவு கண்டால் கூட பரிகாரம் தேடும் பலர் அரசியிலில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதே நேரம், இந்த சென்டிமெண்ட் விவகாரங்களுக்கு விலக்கான சிலரும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில், பேணா தொலைந்ததால் சென்டிமெண்ட் பார்த்த ஒரு வேட்பாளரையும், காலே உடைந்தாலும் சென்டிமெண்ட் பார்க்காத ஒரு வேட்பாளரையும் இங்கே பார்க்கலாம்.

தேவநாதன்

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக, 19 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 21 தொகுதிகளை தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது. அதில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகமும் (இமகமுக) ஒன்று. இக்கட்சிக்கு பாஜக கூட்டணியில் 1 சீட் ஒதுக்கப் பட்டுள்ளது.

இந்த இமகமுகவின் சார்பாக சிவகங்கை தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் அதன் நிறுவனரான தேவநாதன். இந்நிலையில் திருப்பத்தூருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகை தந்த தேவநாதனுக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் காந்தி சிலை பகுதியில் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது, காரில் இருந்து இறங்கிய வேட்பாளருக்கு பலரும் பொன்னாடைகள் மற்றும் மாலைகள் அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் மருது பாண்டியர் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்திய அவர் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் ஏறி நின்று பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

எனவே, கூட்டணி நிர்வாகிகளுடன் வேனில் ஏறி சில நிமிடங்கள் பேசி தனக்கு வாக்கு சேகரித்து விட்டு கீழே இறங்கினார் வேட்பாளர் தேவநாதன்.

பின்னர், “அடுத்த இடத்துக்கு வாக்கு சேகரிக்க போகனும்” அங்கிருந்த நிர்வாகிகளிடம் கூறி விட்டு அவசரம் அவசரமாக காரை நோக்கிச் சென்றவர் தனது சட்டைப்பையில் கை வைத்த மறு வினாடி அப்படியே நின்று விட்டார்.

அவரது சட்டைப் பையில் செருகி வைத்திருந்த பேனா காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவர், திருப்பத்தூர் நிர்வாகிகளிடம் அதைக்கூற, “பேனாதானே புதுசா வாங்கிக்கலாம் ஜி” என அசால்டாக அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்னர் தான், காணாமல் போன தனது பேனாவில் வைரம் பதிக்கப்பட்டிருந்ததாக கூறி இருக்கிறார் தேவநாதன்.

இதனால், அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், உடனே மைக் பிடித்து, “வேட்பாளரின் பையில் செருகி இருந்த பேனா கீழே விழுந்து விட்டது” எனவும், “அதை கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்கவும்” எனவும் அறிவிப்பு செய்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக நேரடியாக போட்டியிடும் 21 மக்களவை தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதே தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியனே மீண்டும் இங்கு திமுக சார்பாக போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமையன்று சென்னை மாநகராட்சி, அடையார் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் அதன் பிறகு வேறு எந்த கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை.

தன் வீட்டில் இருந்தபடியே தேர்தல் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார் என கூறப்பட்ட நிலையில்தான் வேறொரு சமாச்சாரமும் வெளியில் கசிய ஆரம்பித்தது. அதாவது, வேட்பு மனு தாக்கல் செய்த அதே தினத்தில் வேட்பாளர் அலுவலகம் திறப்பது தொடர்பான பணிகளில் இருந்த போது தடுமாறி கீழே விழுந்ததாகவும், அப்போது வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், “வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே வேட்பாளருக்கு கால் முறிவு” என யாராவது சென்டிமெண்டாக பேசி வருத்தப் படுவார்களோ என்பதற்காகவே வீட்டில் அவர் ரெஸ்டில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த நாளே கையில் வாக்கிங் ஸ்டிக்கோடு சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சு முன்னிலையில் பிரச்சாரத்தை துவக்கினார் தமிழச்சி தங்கபாண்டியன்.!

அதன் பிறகு, நேற்று பள்ளிக்கரணையில் செய்த பிரச்சாரத்தின் போது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்காமலேயே மாலை மரியாதைகளை பெற்றுக் கொண்டார் தமிழச்சி தங்க பாண்டியன்.

அப்போதுதான், தனக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் 3 வாரம் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் தேர்தல் நேரமாக இருப்பதால் வலியை பொருட்படுத்தாமல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டதாகவும் கூற, “அதானே..? திராவிட மாடலுக்கு சென்டிமெண்ட் ஏதுங்க?”எனக் கூறுகின்றனர் திமுக உடன் பிறப்புகள்.

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரிதான் இந்த தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours