வந்துட்டேன்னு சொல்லு.. இறந்தவர் ஈமச்சடங்கு நடக்கும்போது திரும்ப வந்தார் !

Spread the love

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், நவாங்கி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா (40). இவருக்கு விமலா என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பஷீராபாத்தில் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலை எல்லப்பா செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த வேலையை விட்டுவிட்டு, தாண்டூர் எனும் இடத்தில் சிமெண்ட் மூட்டை தூக்கும் வேலைக்கு எல்லப்பா சென்றுள்ளார்.

2 நாட்கள் வேலை பார்த்ததில் அவருடன் வேலை பார்க்கும் ஒருவருடன் எல்லப்பா சேர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு மது அருந்தி உள்ளார். போதை அதிகமான எல்லப்பா, அங்குள்ள பிளாட்பாரத்தின் மீது படுத்து தூங்கிவிட்டார்.

அப்போது, இவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு உடன் வந்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றார். அவர் இரவு 11 மணியளவில் விகாராபாத் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு ரயில் வேகமாக வந்து அந்த நபர் மீது மோதியது. இதில் உடல் தூக்கி எறியப்பட்டதில் சின்னாபின்னமாகி விட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார், செல்போன் ஆதாரத்தை வைத்து, இறந்தவர் எல்லப்பாதான் என்ற முடிவுக்கு வந்தனர். இது தொடர்பாக செல்போனில் இருந்த எண்ணுக்கு போன் செய்தனர். அப்போது சிமெண்ட் கடை முதலாளி எடுத்துள்ளார். அவரிடம் எல்லப்பா இறந்து விட்டார் என தகவல் கூறி உள்ளனர். இதையடுத்து அவர், எல்லப்பாவின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை கேட்டு எல்லப்பாவின் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்
கள் அனைவரும் கதறி அழுதனர்.

பின்னர், விகாராபாத் அரசு மருத்துவமனைக்கு சென்று, சடலத்தை கொண்டு வந்து வீட்டருகே இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் இறுதிச் சடங்குக்கு வந்திருந்தனர்.

அதே நேரம், போதை தெளிந்த எல்லப்பா, மீண்டும் பணிக்காக சிமெண்ட் கடைக்கு சென்றார். அங்கு அவரை பார்த்த கடை முதலாளியும், எல்லப்பாவின் கிராமத்து மக்களும் ஆச்சரியமடைந்தனர்.

“நீ இன்னும் சாகலையாடா? எப்படி உயிருடன் இருக்கிறாய் ? ” என ஆச்சரியமாக கேட்டனர். பின்னர், நடந்த விஷயங்களை எல்லப்பா கூறியபின்னர், அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். உடனே கடையில் இருந்து தனது மனைவி விமலாவுக்கு போன் செய்த எல்லப்பா, நான் தான் உன் கணவர் எல்லப்பா பேசுகிறேன். நான் சாகவில்லை. அந்த சடங்குகளை நிறுத்துங்கள். நான் ஊருக்கு வருகிறேன் என தகவல் கொடுத்தார்.

உடனே இறுதிச் சடங்குகள் நிறுத்தப்பட்டன. விகாராபாத் ரயில்வே போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மர்ம நபரின் உடலை பெற்றுக் கொண்டு விகாராபாத் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

செல்போனை ஆதாரமாக கொண்டதாலும், இறந்தவரின் உடல் சின்னாபின்னமாக சிதறி போனதாலும் தான் இந்த தவறு நடந்தது என கூறி, எல்லப்பா மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் ரயில்வே போலீஸார் மன்னிப்பு கேட்டனர். இறந்தவர் உயிரோடு வந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்வையும், பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours