கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வந்த ராமர் கோயில், கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் கோயிலை திறந்து வைத்தார். அதன் பிறகு உலகெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள், ராமரை தரிசித்து வருகின்றனர். ராமர் கோயிலில் சராசரியாக தினமும் 2 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர். பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை 4 முதல் 5 லட்சம் வரை செல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு முதல் முறையாக இந்தாண்டு ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது. அந்நாட்களில் ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால், பக்தர்களுக்காக 24 மணி நேரமும் ஸ்ரீராமர் கோயிலை திறக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளை மேற்கொள்ளவும் ராமர் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் ஏப்ரல் 15 முதல் ராம நவமி வரை அதாவது ஏப்ரல் 17 வரை 24 மணி நேரமும் திறந்திருக்க அயோத்தி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இரவு, பகல், ஆரத்தி நேரம் என எதுவாக இருந்தாலும் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் புதிய அறிவிப்பு ஒன்றை ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours