கார்த்திகை மாதம் முதல் நாளில் கோயில்களில் அலைமோதிய கூட்டம்!

Spread the love

கார்த்திகை முதல் நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்களில் சபரிமலை ஐயப்பபக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை 1-ம் தேதி மாலை அணிந்து விரதம்தொடங்குவது வழக்கம். நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை அணிந்துவிரதம் தொடங்கினர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில்களில் அதிகாலை 4.30 மணி முதலே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் முதல்முறையாக சபரிமலைக்கு செல்பவர்களுக்கு குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்து, விரத முறைகள் குறித்து விளக்கி கூறினர். கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணி முதல் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அங்கு 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், மாலை அணிந்துகொள்ள நீண்ட வரிசை காணப்பட்டது. அதிகாலையில் கணபதி ஹோமம் தொடங்கி, அஷ்டாபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது. ஏற்கெனவே விரதம் தொடங்கி, நேற்று சபரிமலைக்கு புறப்பட்ட பக்தர்கள் அங்கு இருமுடி கட்டிக்கொண்டனர். அம்பத்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், நங்கநல்லூர், சூளைமேடு, அண்ணா நகர், பெரம்பூர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் சிறுவர்கள் முதல்முதியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் திரண்டு, மாலை அணிந்து கொண்டனர். அனைத்து கோயில்களிலும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம் ஒலித்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சபரிமலை செல்ல மாலை அணிந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதல்முறையாக மாலை அணிந்தவர்களில் (கன்னிசாமிகள்) இளைஞர்கள் அதிகமாக உள்ளனர் என்று குருசாமிகள் தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours