குலசை முத்தாரம்மன் திருவிழா.! விரத முறைகளும்.. வேடங்களின் பலன்களும்…

Spread the love

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா கொண்டாப்படும் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். இங்கு அருள்பாலிக்கும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குலசை நோக்கி படையெடுத்து வருவர். லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நாளை குலசை முத்தாரம்மன் கோயில் கடற்கரையில் சூரசம்கார நிகழ்வு நடைபெறும்.

திருச்செந்தூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 65 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஊர் குலசேகரன்பட்டினம். பொதுவாக சிவன் சன்னதி தனியாகவும் , அம்மன் சன்னதி தனியாகவும் தான் கோவிலில் இருக்கும். ஆனால் குலசையில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் உடன் ஒரே பீடத்தில் இருந்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். குலசை முத்தாரம்மன் சன்னதியை சுற்றி வீர மனோகரி, மயானகாளி, பத்ரகாளி, கருங்காளி என அட்டமகாகாளிகள் காவல் காத்து வருகின்றனர்.

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவானது கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து , அம்மன் வாக்குப்படி வேடமணிந்து , யாசகம் பெற்று அதனை காணிக்கையாக கொண்டு வந்து குலசை முத்தாரம்மன் சன்னதியில் செலுத்துவர்.

தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்த்ர்கள் நம்புகின்றனர். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது நமது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன் , சித்திர குப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.

அம்மன் அருளின்படி , காளி வேடம் அணிபவர்கள் 41 நாள்களுக்கு மேலாக விரதம் இருக்க துவங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். மற்ற வேடம் அனுபவர்கள் காளி வேடம் அணிபவர்களிடம் காப்பு கட்டி கொள்வர். மற்ற வேடம் அணிபவர்கள் குடியேறும் நாள் அன்று மலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.

ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல, ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. பச்சை வண்ண மாலையானது பசுமையான வாழ்வை தரும் எனவும், மஞ்சள் வண்ண மாலை மங்கல நிகழ்வை தருவதாகவும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தை தருவதாகவும், துளசி மாலை புனிதத்தை தருவதாகவும், ருத்திராட்ச மாலை சன்னியாச வாழ்வையும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும் , அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று , அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் (நாளை ) நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.

பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கைரையில் குவிந்து இருப்பர். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார். அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். காளி வேடம் அணிந்தவர்கள் மட்டும் கோவிலில் காப்பு தரிப்பார்கள். மற்ற வேடம் அணிந்தவர்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் காப்பு தரித்து கொள்வர். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours