சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவ.16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், பக்தர்கள் பலர் கோயிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பி விடுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் பலர், சென்னை மடிப்பாக்கம் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீஐயப்பன் கோயில் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு சபரிமலையில் அபரிமிதமான பக்தர்களின் கூட்டம் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் உட்பட பலர் ஐயப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பி விடுகின்றனர்.
அவ்வாறு ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள் மற்றும் சபரிமலை செல்ல முடியாதவர்கள் மடிப்பாக்கத்தில் உள்ள கோயிலுக்கு வருகை தரலாம். இங்கு இருமுடி ஏந்தி, 18 படிகள் ஏறி, நெய் அபிஷேகம் செய்து தங்கள் விரதத்தை முடித்து, ஐயப்பனின் அருளை பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours