உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடம்!

Spread the love

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக நேற்று ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்தது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய அணி, அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து 115 புள்ளிகளுடம் 3ம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 106 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், நியூசிலாந்து 95 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025-க்கான தரவரிசையிலும் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 56.25 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. 54.16 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பாகிஸ்தான் அணி 36.66 சதவிகித புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

கடந்த ஆண்டு பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் என ஐசிசியின் இரண்டு கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த சூழலில் தற்போதும் ஆண்டின் தொடக்கத்திலேயே பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours