பஜ்ரங் புனியாவைப் போலவே, தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை மற்றொரு மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தும் திருப்பி அளிக்கும் வகையில் சாலையில் விட்டுச் சென்றுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த வந்த பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்து, தலைநகர் டெல்லியில் நடத்திய போராட்டமும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஜ்ரங் புனியா, சாக்ஷு மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினர். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் மல்யுத்த கூட்டமைப்பில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர்.
பெரும் அழுத்தத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இப்படிப்பட்ட சூழலில், மல்யுத்த கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்றார்.
இது மல்யுத்த வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இதைத்தொடர்ந்து, மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான சாக்சி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பிரதமரின் வீட்டின் வெளியே விட்டு சென்றார்.
பஜ்ரங் புனியாவை போலவே, தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத் அறிவித்திருந்தார். பிரதமர் மோடியிடம் விருதுகளை திருப்பி அளிப்பதற்காக நேற்று மாலை அவரின் வீட்டுக்கு செல்ல வினேஷ் போகத் முற்பட்டார். ஆனால், அவரை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து, வாங்கிய விருதுகளை கடமை பாதையில் விட்டு சென்றுள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை நீளும் கடமை பாதையில் வினேஷ் போகட் நடந்து சென்று விருதுகளை விட்டுச்செல்லும் வீடியோவை பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா, கடந்த 2020 ம் ஆண்டு வினேஷ் போகத்துக்கு வழங்கப்பட்டது. கடந்த 2016ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது
+ There are no comments
Add yours