மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஓபன் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தியுள்ளது.
ஆசிய ஓபன் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் குறைந்த அளவிலான அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதால், இந்திய அணி சீனா அணியுடன் மோத வேண்டிய நிலை உருவானது. இதில் முதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அவரை விட தரவரிசை பட்டியலில் முன்னணியில் உள்ள ஹேன் யூவை எதிர்கொண்டார்.
40 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தந்தார். கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த சிந்துவின் இந்த வெற்றி மூலம் அவர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார்.
இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 3 போட்டிகளில் இந்தியாவின் தனிஷா காஸ்ட்ரோ, அஸ்வினி பொன்னப்பா, அஸ்மிதா சலிஹா ஆகியோர் அடுத்தடுத்து தோல்வி அடைந்தனர். இருந்த போதும் பின்னர் வந்த ட்ரசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிச்சந்த ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் முன்னிலை பெற்று தந்தனர்.
இந்த தொடரை முடிவு செய்யும் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அன்மோல் கார்ப் சீனாவின் வூ லியோ யூவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 22-20, 14-21, 21-18 என்ற செட் கணக்குகளில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு, அன்மோல் வெற்றி தேடித்தந்தார்.
இதன் மூலம் இந்திய அணி சீனாவிற்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இதனிடையே ஏற்கெனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த இந்திய ஆண்கள் அணி, குரூப் ’ஏ’வின் லீக் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடரில் துவக்கம் முதலே அசத்தி வரும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours