நியூசிலாந்திற்கு 398 ரன் இலக்கு!

Spread the love

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் அந்த அணி வெற்றி பெற இந்தியா 398 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அதிரடியாக ஆடிய ரோகித் ஷர்மா 47 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, சுப்மன் கில் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். அவர், 79 ரன் எடுத்திருந்த நிலையில், முதுகு பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து களத்திற்கு வந்த ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். விராட் கோலி தனது 50வது சதத்தை நிறைவு செய்து, சச்சினின் சாதனையை முறியடித்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 117 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ருத்ர தாண்டவம் ஆடிய ஸ்ரேயாஸ் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 70 பந்துகளில் 105 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 20 பந்துகளில் 39 ரன் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன் எடுத்தது.

398 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசையும் சிறப்பான ஒன்று. அதேபோல், இந்திய பந்து வீச்சாளர்களும் இந்த தொடரில் இதுவரை சிறப்பான பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours