பந்து வீச்சில் மிரட்டி 62 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி ..!

Spread the love

பாகிஸ்தான் அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 305 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பை தொடரின் 18-ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைதொடர்ந்து,ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். அவர்கள் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தில் நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. இவர்களின் இருவரின் கூட்டணியில் 259 ரன்கள் குவிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 34 ஓவரில் விக்கெட்டை இழந்தார். மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரி, 9 சிக்ஸர் என மொத்தம் 121 ரன்கள் அடித்தார். அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் வந்தவுடனே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ஸ்மித் களமிறங்க மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 124 பந்துகளில் 14 பவுண்டரி , 9 சிக்ஸர் என 163 ரன்கள் விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களை குவித்தனர். பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் , ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை பறித்தனர். 368 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக், இமாம் மல்ஹக் இருவரும் களமிறங்கினர். ஆஸ்திரேலியா அணி போல பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார்கள். இவர்கள் கூட்டணியை ஸ்டோனிஸ் 134 ரன்கள் எடுத்தபோது பிரித்தார். நிதானமாக விளையாடிய அப்துல்லா ஷபிக் 22 ஓவரில் 64 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த இமாம் மல்ஹக் அடுத்து 2 ஓவரில் 70 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பாபர் அசாம் நிதானமாக விளையாடியும் நிலைத்து நிற்காமல் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் முஹம்மது ரிஸ்வான், இப்திகார் அகமது கூட்டணி அமைக்க இப்திகார் அகமது வந்த வேகத்தில் அடுத்தடுத்து 3 சிக்ஸர் விளாசி ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை மிரட்டினார்.

இவரின் மிரட்டல் நிலைத்து நிற்கவில்லை இப்திகார் அகமது 26 ரன் எடுத்து நடையை கட்டினார். முஹம்மது ரிஸ்வான் சிறப்பாக விளையாட அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 46 ரன்னில் விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நிலைத்த போது வந்த வேகத்தில் உசாமா மிர் டக் ஆகி வெளியேற இறுதியாக பாகிஸ்தான் அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 305 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டையும் , மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டையும் , ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். பாகிஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் விளையாடி தலா 2 போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளனர். அதேபோல ஆஸ்திரேலியா அணியும் 4 போட்டிகளில் விளையாடி தலா 2 போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours