இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களில் சுருண்டது
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளன. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஜோகன்ஸ்பெர்க் நகரில் தொடங்கியுள்ளது.
கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியுடன் தற்போது விளையாடி வருகிறது. இன்று மதியம் 1:30க்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக ரிஷா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி சோர்சி ஆகியோர் களத்தில் இறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த வாண்டர் டசன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்கா அணி தடுமாறியது.
பின்னர் கேப்டன் மார்க்ரமுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடிய டோனி டி சோர்சி 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 7.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி 42 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் விக்கெட் கீப்பர் ஹென்ரிக் கிளாசனை போல்டாக்கி வெளியேற்றினார். ஆவேஷ் கான் பந்து வீச்சில் எய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் வியான் முல்டர் எல்.பி. டபிள்யூ. முறையில் வெளியேறினார். 10.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 52 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆண்டில் பெலுக்வாயோ 33 ரன்கள் சேர்க்க 27.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்து. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
+ There are no comments
Add yours