19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை – இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Spread the love

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் கடந்த 19ம் தேதி துவங்கி பிப்ரவரி மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இந்த போட்டிகள், அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரத்தை ஐசிசி ரத்து செய்ததை அடுத்து, தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது.

இந்த தொடரில், இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 16 நாடுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியும், வங்கதேச அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், ஆதர்ஷ் சிங் 74 ரன்களும், கேப்டன் உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தரப்பில் மரூஃப் மிரதா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் ஷிகப் ஜேம்ஸ் 54 ரன்களும், அரிஃபுல் இஸ்லாம் 41 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால், அந்த அணி 45.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 167 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சௌமி குமார் பாண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இன்று நடைபெறும் போட்டிகளில், ’சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை-ஜிம்பாப்வே அணிகளும், ’டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-நேபாளம் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி அடுத்ததாக வருகிற 25ம் தேதி அயர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நேற்றைய போட்டியில் 25வது ஓவரில் வங்கதேச அணி வீரர்களுடன் இந்திய கேப்டன் சஹாரன் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours