தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டி, செயின்ட் ஜார்ஜ்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், 4 ரன்களில் ஆட்டமிழந்து, ருத்துராஜ் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். ஆனால் சாய் சுதர்சன் நிலைத்து நின்று ஆடி 62 ரன்கள் குவித்து, லிசாட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ராகுல் 56 ரன்கள் குவித்து பெர்க்கர் பந்தில் ஆட்டமிழந்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
46.2 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பெர்க்கர் 3 விக்கெட்டுகளையும், மகராஜ், பியூரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது.
+ There are no comments
Add yours