சென்னையில் நடைபெற்ற 79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டின் வேலவன் செந்தில்குமாரும், மகளிர் பிரிவில் டெல்லியைச் சேர்ந்த அனஹத் சிங்கும் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த நவம்பர் 17-ம் தேதி சென்னையில் உள்ள டிரயத்லான் அகாடமியில் தொடங்கியது. இதில் நாடு முழுவதிலும் உள்ள 26 மாநிலங்களைச் சேர்ந்த, 417 வீரர்கள் பங்கேற்றனர். 11 பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டின் வேலவன் செந்தில்குமாரும், அபய் சிங்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இதில் 12-10, 11-3, 12-10 என்ற செட்களில், 3-0 என்ற கணக்கில் வென்று வேலவன் செந்தில்குமார் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம் நடப்பு சாம்பியனான அபய் சிங் தோல்வியைச் சந்தித்தார்.
இதேபோல் பெண்கள் பிரிவில் டெல்லியைச் சேர்ந்த அனஹத் சிங் மற்றும் தான்யா கன்னா ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். தான்யாவை விட 12 ஆண்டுகள் இளையவரான அனஹத் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 9-11 என்ற கணக்கில் அவர் இழந்த போதும், 2வது செட்டில் 11-4 என முன்னிலை வகித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தான்யாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.
பரிசுக் கோப்பையுடன் வேலவன் செந்தில்குமார், அனஹத் சிங்
பரிசுக் கோப்பையுடன் வேலவன் செந்தில்குமார், அனஹத் சிங்
இதையடுத்து, அனஹத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், மிகக் குறைந்த வயதில் பட்டம் பெற்ற 2வது நபர் என்ற பெருமையை அவர் தனது 15வது வயதில் படைத்துள்ளார். இதற்கு முன்பாக கடந்த 2000வது ஆண்டு, ஜோஸ்னா சின்னப்பா 14வது வயதில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
+ There are no comments
Add yours