ஐபிஎல் குறித்து அசுதோஷ் சர்மா !

Spread the love

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் சிக்ஸர் விளாசும் இயந்திரமாக மாறியுள்ளார் கிங்ஸ் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் அசுதோஷ் சர்மா. இதுவரை டி 20-ல் 18 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர், 43 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இந்த வகையில் ஒரு ஆட்டத்தில் சராசரியாக 2.38 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முலான்பூரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 7 சிக்ஸர்களை விளாசினார் அசுதோஷ் சர்மா.

இதில் ஜஸ்பிரீத் பும்ரா வீசிய 13-வது ஓவரில் அசுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸர் விளாசியது அனைவரையும் கவர்ந்தது. இது நோபாலுக்கு மாற்றாக வீசப்பட்ட ப்ரீஹிட் பந்துதான் என்றாலும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ராவுக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸர் விளாசியதுதான் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, ரன்களை சிக்கனமாகவும் வழங்கி வருகிறார். ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை மட்டுமே வழங்கி வரும் பும்ரா இந்த தொடரில் இரண்டு சிக்ஸர்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில்தான் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொண்டுள்ளார் அசுதோஷ் சர்மா. எப்படியும் பும்ராவிடம் இருந்து யார்க்கர் பந்தே வரும் என எதிர்பார்த்த அவர், ஆஃப் ஸ்டம்புக்கு குறுக்கே சென்று, முழங்காலை மடக்கியவாறு டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸரை பறக்கவிட்டார்.

இதுகுறித்து அசுதோஷ் சர்மா கூறும்போது, “பும்ரா வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்ட வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. இதுபோன்ற ஷாட்களை விளையாடுவதற்கு பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இந்த ஷாட்டை உலகின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக மேற்கொண்டுள்ளேன்” என்றார்.

அசுதோஷ் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் அவர், களத்துக்குள் புகுந்த போதெல்லாம் பஞ்சாப் அணி நெருக்கடியிலேயே இருந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் அசுதோஷ் சர்மா களமிறங்கிய போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஓவருக்கு சராசரியாக 11.11 ரன்கள் (27 பந்துகளில் 50 ரன்கள்) தேவையாக இருந்தன. அந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார் அசுதோஷ் சர்மா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 27 பந்துகளில் 69 ரன்கள் தேவை (ஓவருக்கு சராசரியாக 15.33 ரன்கள்) என்ற கட்டத்தில் களமிறங்கிய அசுதோஷ் சர்மா 15 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். ஆனால் அந்த ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது பஞ்சாப் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்களை தாரைவார்த்திருந்த நிலையில் அசுதோஷ் சர்மா களம் புகுந்தார்.

அந்த சூழ்நிலையில் அணியின் வெற்றிக்கு 64 பந்துகளில் 116 ரன்கள் (ஓவருக்கு சராசரியாக 10.88 ரன்கள்) தேவையாக இருந்தன. மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியை சந்திக்கும் சூழ்நிலையில் இருந்த பஞ்சாப் அணிக்கு, தான் சந்தித்த 2-வது பந்திலேயே சிக்ஸர் விளாசி இலக்கை துரத்துவதற்கான நம்பிக்கையை கொடுத்தார் அசுதோஷ் சர்மா.

25 வயதான அசுதோஷ் சர்மா நேர்காணல் ஒன்றில் சூர்யகுமார் யாதவும், கிளென் மேக்ஸ் வெல்லும் தனது ரோல்மாடல் என கூறியிருந்தார். இது அவருடயை ஆட்டத் திறனிலும் பிரதிபலித்தது. களமிறங்கிய உடனேயே ஆகாஷ் மத்வால் பந்தை, சூர்ய குமார் யாதவ் பாணியில் ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். இதே பந்து வீச்சாளருக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டையும் விளையாடி மிரளச் செய்தார் அசுதோஷ் சர்மா. இது கிளென் மேக்ஸ்வெல் ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு என்பது 1.88 சதவீதமே இருந்தது. ஆனால் அசுதோஷ் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்த போது பஞ்சாப் அணியின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு என்பது 76.13 சதவீதமாக அதிகரித்திருந்தது. ஆனால் மீண்டும் ஒரு முறை பஞ்சாப் அணி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கத் தவறியது.

அசுதோஷ் சர்மா தனது சிக்ஸர் அடிக்கும் வலிமையைக் காட்டுவது இது முதல் முறை அல்ல. ஆறு மாதங்களுக்கு முன்பு, சையத் முஷ்டாக் அலி டி 20 தொடரில் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக ரயில்வே அணிக்காக களமிறங்கிய அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரது பார்வையையும் தனது பக்கம் ஈர்த்திருந்தார். இதன் மூலம் டி 20-ல் யுவராஜ் சிங்கின் அதிவேக அரை சதம் சாதனையை முறியடித்திருந்தார் அசுதோஷ் சர்மா.

அந்த ஆட்டத்தில் அவர், 8 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இந்த தொடரில் 6 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்டிரைக் ரேட் 277.27 ஆக இருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஐபிஎல் தொடரில் அசுதோஷ் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் 205.26 இது இருக்கிறது. அசுதோஷ் சர்மவின் சமீபத்திய அனைத்து உயர்வுகளுக்கும் பின்னால், பல வருட உழைப்பு மற்றும் இதயத்தை நொறுங்கச் செய்யும் கதையும் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்லம் என்ற நகரத்தில் பிறந்த அசுதோஷ், தனது சொந்த ஊரில் போதுமான வசதிகள் இல்லாததால் தனது கிரிக்கெட் திறன்களை மேம்படுத்த இந்தூருக்கு குடிபெயர்ந்தார். அப்போது அவருக்கு 8 வயது. பெற்றோரிடமிருந்து விலகி இருந்த அவர், ஒரு சிறிய இடத்தில் தங்கியிருந்தார். அந்த தருணங்களில் சாப்பிடுவதற்கு கூட அசுதோஷிடம் பணம் இருந்தது இல்லை.

ஒரு வேளை உணவுக்காக உள்ளூர் போட்டிகளில் நடுவராக பணியாற்றினார். இதன் பின்னர் இந்தூரில் உள்ள எம்.பி.சி.ஏ அகாடமியில் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் அமே குரேசியாவின் பயிற்சியின் கீழ் இணைந்ததும் அசுதோஷின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

இதன் பின்னர் அசுதோஷ் மத்தியபிரதேச கிரிக்கெட் அணிக்காக பல்வேறு வயது பிரிவுகளில் விளையாடி தரவரிசையில் உயர்ந்தார். இதன் பயனாக 2018-ம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் அறிமுகமானார். அடுத்த சீசனில், அவர் மூன்று அரைசதங்கள் உட்பட 233 ரன்களுடன் மத்திய பிரதேச அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 2-வது வீரராக இருந்தார். ஆனால், அதற்கு அடுத்த வருடம் மத்திய பிரதேச அணியில் இருந்து எந்தவித காரணமும் இல்லாமல் 22 வயதான அசுதோஷ் சர்மா நீக்கப்பட்டார்.

இது குறித்து அசுதோஷ் கூறும்போது, “எந்த விளக்கமும் இல்லாமல் நான் உத்தரபிரதேச அணியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். நான் எங்கே தவறு செய்தேன் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். பல நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை. அந்த 3 வருடங்கள் கடினமாக இருந்தன” என்றார்.

இதையடுத்து அசுதோஷுக்கு ரயில்வே அணியில் வாய்ப்பு கிடைத்தது. 2023-ம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் ரயில்வே அணிக்காக அறிமுகமானார். இது 4 வருடங்களுக்குப் பிறகு அவரது வாழ்க்கையை மாற்றியது. இதன் பின்னர் அடுத்த 2 மாதங்களில் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 76 பந்துகளை சந்தித்துள்ள அசுதோஷ் சர்மா இதுவரை 13 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். நேசித்த விளையாட்டை 4 வருடங்களாக தவறவிட்டாலும், சரியான தருணத்தில் மிகப்பெரிய டி 20 அரங்கில் தற்போது பிரகாசிக்கத் தொடங்கி உள்ளார். எனினும் தனது ஆட்டத்தை அவர், அணியின் வெற்றிக்கான செயல் திறனாக மாற்றினால் மதிப்பு அதிகரிக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours