சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின். இந்நிலையில், அவரது ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அவரை அணி நிர்வாகம் நியாமான முறையில் நடத்தவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியின் போதே ‘நான் போறேன்’ என அவர் சொல்லியதாக ரோஹித் தெரிவித்தார். முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்தபோது அதை நேரடியாகவே அஸ்வின் சொல்லியுள்ளார். அதுவே அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை சொல்கிறது.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இவ்வளவு சாதனைகளை படைப்பது சாதாரண விஷயம் அல்ல. சில மாநிலங்களை சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும் அந்த சவால்களை எல்லாம் கடந்து 500+ விக்கெட்டுகளை வீழ்த்திய லெஜெண்ட் அஸ்வின். பலமுறை அவரை ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவையைப் போல அவர் எழுச்சி கண்டார். அவரது கடைசி போட்டி இப்படி இருந்திருக்க கூடாது.
500+ விக்கெட்டுகளை வீழ்த்திய, 38 வயதான அவர் களத்துக்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் என சொன்னால் அது நியாயமா? அது சரியா? அவர் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை. அவரது நண்பராக, சக அணி வீரராக நான் உணர்வு பூர்வமாக இதை பகிர்கிறேன். அவரை எண்ணி வருந்துகிறேன். அவரது எக்ஸிட் இப்படி இருந்திருக்க கூடாது” என தனியார் ஊடக நிறுவனத்துக்காக பேசிய வீடியோவில் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வின் தெரிவித்தது: “உண்மையில் எனக்கு இப்படியொரு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைவரும் இங்கு வந்தமைக்கு நன்றி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக 2011 உலகக் கோப்பை வென்று வீடு திரும்பிய போது இப்படியொரு வரவேற்பு இருந்தது. அதே உணர்வை இப்போது பெறுகிறேன்.
இப்போது நான் அடுத்த பாதைக்கு செல்கிறேன். கிரிக்கெட் வாழ்வில் என்னால் இதை செய்ய முடியவில்லையே என்ற எந்த வருத்தமும் இல்லை. அப்படி பல பேரை நான் பார்த்துள்ளேன். ஆனால், எனக்கு அப்படி எதுவும் இல்லை. ஓய்வு பெற்றதிலும் வருத்தம் இல்லை.
என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாடுவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட போகிறேன். இது சற்று ஆச்சரியம் தரலாம். இந்திய அணிக்காக விளையாடும் அஸ்வின் தான் ஓய்வு பெற்றுள்ளார். எனக்குள் கிரிக்கெட் இன்னும் ஓய்வு பெறவில்லை” என தெரிவித்திருந்தார்.
+ There are no comments
Add yours