சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து வங்கதேசம் அணி 2 – 0 என பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி விளையாடியது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 274 ரன்கள் எடுத்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. ஆனால், அப்போது லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் இணைந்து அற்புதம் நிகழ்த்தினார்கள்.
மெஹிதி ஹாசன் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, லிட்டன் தாஸ் அபாரமாக பேட்டிங் செய்து 138 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் வங்கதேச அணி 262 ரன்கள் எடுத்தது. வெறும் 12 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. ஆனால், அந்த அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின் நான்காவது நாளில், ஜாகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் மழை வந்ததால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியின் ஜாகிர் ஹசன், ஷத்மன் இஸ்லாம், கேப்டன் நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சிறப்பாக ஆடி வங்கதேசம் வெற்றிபெற வழிவகுத்தனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து வீழ்த்தி சாதனை படைத்துள்ளது வங்கதேச அணி.
+ There are no comments
Add yours