பெங்களூரு டெஸ்ட்- நியூசிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு

Spread the love

பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் 2-வது இன்னிங்ஸில் 462 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இரண்டாம் நாளன்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூஸிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் அந்த அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்டிங்கில் மிரட்டியது.

ரோகித் சர்மா அரை சதமடித்து 52 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 70 ரன்களுடன் வெளியேறினார். ஒற்றை ஆளாக நியூஸிலாந்தை பந்தாடிய சர்பராஸ் கான் 195 பந்துகளில் 150 ரன்களைச் சேர்த்து அதிரடியாக ஆடினார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்துக்கு சதம் மிஸ்ஸிங். 99 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கே.எல்.ராகுல் 12 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 5 ரன்கள், அஸ்வின் 15 ரன்கள், பும்ரா, சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டாக, 99.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 462 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் 106 ரன்கள் முன்னிலைப்பெற்ற இந்திய அணி, நியூஸிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

சர்பராஸ் கான் ஆட்டத் திறன்: நியூஸிலாந்தின் மாறும் கள அமைப்புக்கு ஏற்ப தன் ஸ்ட்ரோக்குகளை அற்புதமாக ஆடினார் சர்பராஸ் கான். குறிப்பாக, லெக் திசையில் டீப்பில் வைத்துக் கொண்டு ஸ்வீப் ஆடுமாறு மிடில் ஸ்டம்பில் வீசிய பந்தை விக்கெட் கீப்பர் பின்னால் லாப் ஸ்வீப் ஆடிய ஷாட் அவரது கள வியூகத்தை ஏமாற்றும் திறனை பறைசாற்றியது.

ரிஷப் பந்த் சாதனை: அஜாஜ் படேலின் ஒரு ஓவரில் ரிஷப் பந்த் 2 சிக்சர்களை விளாசி 61 சிக்சர்களுடன் கபில் தேவ்வின் சிக்சர்கள் சாதனையைக் கடந்தார். இப்போது பென் ஸ்டோக்ஸ் 131 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க அடுத்த இடத்தில் 107 சிக்சர்களுடன் பிரெண்டன் மெக்கல்லமும் 100 சிக்சர்களுடன் 3ம் இடத்தில் ஆடம் கில்கிறிஸ்டும், 98 டெஸ்ட் சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் 4ம் இடத்திலும், காலிஸ் 97 சிக்சர்களுடன் டாப் 5-ல் உள்ளனர். 91 சிக்சர்களுடன் சேவாக் இந்திய வீரர்களில் அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்க, ரோஹித் சர்மா 88 சிக்சர்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours