பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 180 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (அக்.16) தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து சொந்த ஊரில் மோசமான சாதனையை பதிவு செய்தது இந்திய அணி. 5 வீரர்கள் டக்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு டாம் லேதம் – டெவோன் கான்வே இணை தொடக்கம் கொடுத்தது. குல்தீப் யாதவ் வீசிய 18வது ஓவரில் கேப்டன் டாம் லேதம் 15 ரன்களுக்கு அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த வில்யங், டெவோன் கான்வேயுடன் கைகோக்க, இருவரும் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். 33 ரன்களைச் சேர்த்த வில்யங்-கை அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் ஜடேஜா. மறுபுறம் 3 சிக்சர்கள் விளாசி 91 ரன்களை குவித்து டெவோன் கான்வே விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல். கான்வேக்கு சதம் மிஸ்ஸிங்!
ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் பொறுமையாக ஆடிக்கொண்டிருக்க இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் 3 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 180 ரன்களை சேர்த்து 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
+ There are no comments
Add yours