பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 252 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனிலுள்ள காபா மைதானத்தில் டிச.14-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் இன்று (டிச.17) 4வது நாள் ஆட்டம் தொடங்கியதும், ரோகித் சர்மா 10 ரன்களில் அவுட்டாக, மறுபுறம் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பொறுப்பாக ஆடிய அவர், 84 ரன்களில் அவுட்டானார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டியில் தனது 22-வது அரைசதத்தை பதிவு செய்தார். நிதிஷ்குமார் ரெட்டி துணை நின்றாலும், 16 ரன்களில் போல்டானார். 60 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 194 ரன்களைச் சேர்ந்திருந்தது.
அடுத்து வந்த சிராஜ் 1 ரன்னில் கிளம்பினார். அணியின் ஸ்கோரை ஏற்றிய ஜடேஜா 77 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 246 ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனை கடந்துவிடலாம் என்ற நிலை. களத்தில் பும்ரா – ஆகாஷ் தீப் இருந்தனர். இருவரும் இணைந்து விக்கெட் வீழாமல் பார்த்துகொண்டனர். ஆகாஷ் தீப் அடித்த சிக்சர் இறுதியில் இந்திய அணியை ஃபாலோ ஆனிலிருந்து காப்பாற்றியது. தொடர்ந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 252 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆகாஷ் தீப் 17 ரன்களுடனும், பும்ரா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். புதன்கிழமை (டிச.18) கடைசி நாள் என்பதால் பெரும்பாலும் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
+ There are no comments
Add yours