‘டைம் அவுட்’ முறையில் அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் சிரித்து கொண்டு நடுவரிடம் அனுமதி கேட்ட கிறிஸ் வோக்ஸ்
இன்று 40 ஆவது உலகக்கோப்பை லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் இறங்கிய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். இதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும், தொடக்க வீரர் டேவிட் மாலன் 87 ரன்கள் எடுத்தனர்.
இதனால் நெதர்லாந்துக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் போது 36-வது ஓவரில் மொயீன் அலி விக்கெட் வீழ்ந்தபோது பேட் செய்ய கிறிஸ் வோக்ஸ் களத்திற்கு வந்தார். கிரீஸுக்கு வந்தவுடன் கிறிஸ் வோக்ஸ் அவரது ஹெல்மெட் உடைந்ததை பார்த்து நேராக நடுவரிடம் சென்று ஹெல்மெட் உடைந்துவிட்டது என்று கூறிவிட்டு, வேறு ஹெல்மெட் கொண்டு வர பயத்துடன் சிரித்து கொண்டு அனுமதி கேட்டார். அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் இதுபோன்று ஹெல்மெட் உடைந்ததை பார்த்து வேறு ஹெல்மெட் கொண்டு வர அனுமதி கேட்டார். ஹெல்மெட் கொண்டு வர நேரம் ஆனதால் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட்டு “டைம் அவுட் ” முறையில் மேத்யூஸ் விக்கெட்டை இழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த முறையில் அவுட்டான முதல் வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற்றார்.
40.1.1 இன் படி, ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்ஸ்மேன் ஓய்வு பெற்ற பிறகு புதிய பேட்ஸ்மேன் அடுத்த பந்தை 3 நிமிடங்களுக்குள் விளையாட தயாராக இருக்க வேண்டும். உலகக்கோப்பைக்கு இந்த வரம்பு 2 நிமிடங்கள் உள்ளது. புதிய பேட்ஸ்மேன் அவ்வாறு செய்யத் தவறினால், அவர் அவுட் என அறிவிக்கப்படுவார். இதற்கு ‘டைம் அவுட்’ என்று பெயர்.
40.1.2 இன் படி, புதிய பேட்ஸ்மேன் இந்த நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் (3 நிமிடங்கள்) முழுமையாக ஆடுகளத்தில் இல்லை என்றால், நடுவர் விதி 16.3 நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இதன் காரணமாக மேற்கண்ட விதியின்படி பேட்ஸ்மேன் “டைம் அவுட்” என்று அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours