புது டெல்லி: ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று விவேக் பாணியில் விராட் கோலியின் பேட்டிங் நாளுக்கு நாள் சரிந்து வரும் வேளையில் கவுதம் கம்பீர் “எல்லாம் பேசாம இருங்க, அவருக்கு ரன்னு மேல இன்னும் ஆசையாத்தான் இருக்கு” என்று நன்றாகத் தாங்கியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் அரைசதம் எடுத்ததோடு சரி. இப்போது நியூஸிலாந்து தொடரில் பேட்டிங் பிட்சில் ஏதாவது ஃபார்முக்கு வந்தால்தான் ஆஸ்திரேலியாவில் இவரைக் கண்டு கொஞ்சமாவது பயப்படுவார்கள். இல்லையெனில் இவரைக் கட்டி அனுப்பி விடுவார்கள். ஆகவே கோலி பார்முக்கு வருவது முக்கியம் என்பதை அணி நிர்வாகம் உணரும் அளவுக்கு கோலி உணர்ந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
பயிற்சியாளர் பொறுப்பு கைக்கு வந்தவுடன் ‘தனிப்பட்ட வீரரை விட அணிதான் பெரிது, நாடுதான் பெரிது’ என்றெல்லாம் உதார் விட்டார் கம்பீர். சரி இவர், ஆடாமலேயே ஓபி அடிக்கும் பழைய ஸ்டார் வீரர்களுக்கு ஒரு பாடம் எடுப்பார் என்ற எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டார். ஆனால் இப்போதோ, வீரர்கள் என்னதான் சொதப்பினாலும் அவர்களை ‘ஆதரிப்பது’ என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி பற்றி அவர் கூறியதாவது: “இதோ பாருங்க! விராட் கோலியைப் பற்றிய என் சிந்தனைகளெல்லாம் தெளிவாகவே உள்ளன. அவர் வேர்ல்ட் கிளாஸ் கிரிக்கெட்டர். நீண்ட காலமாக அவர் செயல்பட்டு வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் என்னென்ன வேட்கை அவரிடம் இருந்ததோ அதே தாகம் இப்போதும் அவருக்கு உள்ளது. இந்த தாகம் தான் அவரை இன்று உலகத்தரம் வாய்ந்த வீரராக முன்னேற்றியுள்ளது. எனவே இந்த நியூசிலாந்து தொடரில் அவர் ரன்களைக் குவிக்க விருப்பமாகவே இருப்பார். அப்படியே அந்த பார்மை ஆஸ்திரேலியாவுக்கும் எடுத்துச் செல்வார் என்று நான் ஆழமாக நம்புகிறேன். ஆம் இந்த 3 டெஸ்ட் போட்டி, அடுத்து ஆஸ்திரேலியா தொடர் என்பதை அவரும் நினைவில் கொண்டிருப்பார்.
ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அவர் மீதான தீர்ப்புகளை நாம் வழங்க வேண்டியதில்லை. அது நியாயமாகாது. விளையாட்டில் ஒரு வீரருக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம். இப்போதைக்கு போட்டி முடிவுகள் சாதகமாக அமைகின்றன. அதில் அவரது பங்களிப்பு இருக்கிறது. என் கடன் வீரர்களுக்கு பணி செய்து கிடப்பதே, அவர்களைக் காப்பதே. சிறந்த 11 வீரர்களைத் தேர்வு செய்வதுதான் என் பணி. யாரையும் நீக்குவதல்ல. 8 டெஸ்ட் போட்டிகள் தொடர்ச்சியாக உள்ளன. எனவே அனைவரும் ரன்கள் எடுக்க ஆர்வமாகவே இருப்பார்கள், கோலி இதற்கு விதிவிலக்கல்ல” என்றார் கம்பீர்.
+ There are no comments
Add yours