சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளார் அஸ்வின். சென்னை வந்துள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “உண்மையில் எனக்கு இப்படியொரு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைவரும் இங்கு வந்தமைக்கு நன்றி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக 2011 உலகக் கோப்பை வென்று வீடு திரும்பிய போது இப்படியொரு வரவேற்பு இருந்தது. அதே உணர்வை இப்போது பெறுகிறேன்.
இப்போது நான் அடுத்த பாதைக்கு செல்கிறேன். கிரிக்கெட் வாழ்வில் என்னால் இதை செய்ய முடியவில்லையே என்ற எந்த வருத்தமும் இல்லை. அப்படி பல பேரை நான் பார்த்துள்ளேன். ஆனால், எனக்கு அப்படி எதுவும் இல்லை. ஓய்வு பெற்றதிலும் வருத்தம் இல்லை.
என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாடுவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட போகிறேன். இது சற்று ஆச்சரியம் தரலாம். இந்திய அணிக்காக விளையாடும் அஸ்வின் தான் ஓய்வு பெற்றுள்ளார். எனக்குள் கிரிக்கெட் இன்னும் ஓய்வு பெறவில்லை” என தெரிவித்தார்.
கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் விளையாடி வந்தார். 38 வயதான அவர், 105 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் மொத்தமாக 4,394 ரன்கள் மற்றும் 765 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
+ There are no comments
Add yours