நியூயார்க்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் நாளை (2-ம் தேதி) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டம் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக யாரை களமிறக்குவதற்கு என்பதற்கும், ஜஸ்பிரீத் பும்ராவுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக யாரை களமிறக்குவது என்பதற்கும் தீர்வு காணக்கூடியதாக அமையக்கூடும். ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால் விளையாடும் லெவனில் ஷிவம் துபே இடம் பெறுவது சந்தேகம்.
மாறாக விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். பந்து வீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் இவர்களில் யார்? பும்ராவுடன் இணைந்து செயல்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கும் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் தீர்வு காண இந்திய அணி முயற்சிக்கக்கூடும். பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் உள்ள 15 வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.
+ There are no comments
Add yours