சர்வதேச சதுரங்கப் போட்டி- பிரான்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈரோடு இனியவன்.

Spread the love

ஈரோடு: பிரான்ஸில் நடந்த சர்வதேச சதுரங்கப் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர்செல்வம் – சரண்யா தம்பதியரின் மகன் ப.இனியன். 6 வயது முதல் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இனியன், மாநில, தேசிய அளவிலான போட்டிகள் தொடங்கி சர்வதேச அளவிலான போட்டிகள் வரை பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம்: சதுரங்கப் போட்டிகளைப் பொறுத்தவரை கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் மிக உயர்ந்ததாகும். சர்வதேச அளவில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற வேண்டுமானால், மூன்று முறை கிராண்ட் மாஸ்டர் நார்ம் தகுதியைப் பெற வேண்டும்.

இதன்படி, ஜெர்மனியில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் ஒருமுறை, ஸ்பெயினில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் இருமுறை என கிராண்ட் மாஸ்டர் நார்ம் தகுதியினை இனியன் பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்யா மற்றும் பிரேசிலில் நடந்த போட்டிகளில் பங்கேற்று 2513 புள்ளிகள் பெற்று, இந்தியாவின் 61 வது கிராண்ட் மாஸ்டராக இனியன் தேர்வு செய்யப்பட்டார்.

17 நாடுகளின் வீரர்கள்: இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டிகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்ற கிராண்ட் மாஸ்டர் இனியன், பிரான்ஸ் நாட்டின் லா பிளாக்னே நகரில் கடந்த 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடந்த, ‘லா- பிளாக்னே ஓப்பன் 2024’ சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றார். இப்போட்டியில் 17 கிராண்ட் மாஸ்டர்கள், 40 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 17 நாடுகளை சார்ந்த184 வீரர்கள் பங்கேற்றனர்.

ஒன்பது சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில், 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் சமன், ஒரு போட்டியில் தோல்வி என 7 புள்ளிகளுடன் 2-ம் இடத்தை சமன் செய்தார். டை பிரேக் முறையில் இந்த போட்டியில் 3வது இடத்தைப் பிடித்து கிராண்ட் மஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் பெற்றார். இப்போட்டியில், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் ஜ்யல்ஸ் முஸ்ஸர்ட் முதலிடமும், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ராஜா ரித்விக் 2ம் இடமும் பெற்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours