போர்ட் ஆஃப் ஸ்பெயின்: தென் ஆப்பிரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வந்த முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 357 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் 233 ரன்களும் எடுத்தன.
124 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் விளாசிய நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. டோனி டிஸோர்ஸி 45, எய்டன் மார்க்ரம் 38, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68, கேப்டன் தெம்பா பவுமா 15 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து 298 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடைசி நாளான நேற்று முன்தினம் 56.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 10 ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 106 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் அடுத்த 3 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ரன்களே சேர்த்தது.
56.2-வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் சிக்ஸர் விளாசினார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தை டிராவில் முடிக்க இரு அணி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜேசன் ஹோல்டர் 31, ஜோஸ்வா டி சில்வா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அதிரடியாக விளையாடிய அலிக் அத்தனாஸ் 116 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசியநிலையில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ்மகாராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி கயானாவில் தொடங்குகிறது.
+ There are no comments
Add yours