புதுடெல்லி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் டி20 அணியில் இடம் பிடிப்பதற்கான தகுதி, பாபர் அஸமுக்கு இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 122 ரன்கள் எடுத்தார் பாபர். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 101.66. இந்த தொடரில் அணியை வழிநடத்தியதும் அவர் தான். இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் சிக்ஸர்கள் பறக்க விடும் பேட்ஸ்மேன்கள் ஆட வேண்டுமென சேவாக் தெரிவித்துள்ளார்.
“பாபர் அஸம், சிக்ஸர்கள் விளாசும் வகையிலான வீரர் அல்ல. ஆட்டத்தில் செட் ஆனதும், சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது அவர் சிக்ஸர்கள் அடிப்பார். அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கால்களை நகர்த்தி அல்லது கவர் திசையில் சிக்ஸர் அடித்தோ நான் பார்த்தது கிடையாது. அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ஆனால், தனது அணியின் நலன் சார்ந்து கேப்டன் முடிவு எடுக்க வேண்டும். அவரால் முதல் 6 ஓவர்களில் அணிக்காக 50-60 ரன்கள் எடுக்க முடியவில்லை என்றால் மாற்று வீரரை டாப் ஆர்டரில் ஆட செய்ய வேண்டும். பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் நீக்கப்பட்டால், அணியில் இடம் பிடிப்பதற்கான தகுதி கூட அவருக்கு இல்லை என்றே நான் சொல்வேன்” என சேவாக் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours