பெங்களூரு: 100 சதவீத உடற்தகுதியை பெற்ற பிறகே அணிக்கு திரும்புவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அவர் காயமடைந்தார். கால் பகுதியில் ஏற்பட்ட அந்த காயத்தையடுத்து இந்திய அணி விளையாடிய சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாட முடியாமல் போனது. இந்தச் சூழலில் காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர், அணிக்கு திரும்புவதில் ஆர்வமாக உள்ளார். அதே நேரத்தில் உடற்தகுதியிலும் அதீத கவனம் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஷமி, “காயம் காரணமாக அணியில் இருந்து நீண்ட நாட்களாக நான் வெளியில் உள்ளேன். எனது உடற்தகுதி சார்ந்து இப்போது இயங்கி வருகிறேன். எந்தவித குழப்பமும் இல்லாமல் அணிக்குள் வர விரும்புகிறேன். நான் வலுவாக வருவதே சிறந்தது. அப்போது தான் காயம் சார்ந்த அச்சுறுத்தல்கள் இருக்காது.
நான் நூறு சதவீத உடற்தகுதியுடன் இருப்பதுதான் முக்கியம். நான் பந்து வீச தொடங்கி உள்ளேன். காயம் குறித்த சந்தேகம் மற்றும் அசவுகரியம் இல்லாமல் விளையாட முடிவு செய்துள்ளேன். அதனால், நான் எந்த ஃபார்மெட்டில் விளையாடுகிறேன் என்பது முக்கியமல்ல. வங்கதேச, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்கள் எல்லாம் இதில் அடங்கும். நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவும் வாய்ப்பு உள்ளது” என ஷமி தெரிவித்துள்ளார்.
34 வயதான ஷமி, கடந்த 2013 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை 64 டெஸ்ட், 101 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி 448 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். இதில் 7 இன்னிங்ஸ் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
+ There are no comments
Add yours