இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றவுடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த ஓய்வு முடிவை ஆறு மாதங்களுக்கு முன்பே அவர்கள் எடுத்து விட்டதாகவும், அது குறித்து அப்போது ஜெய் ஷா உள்ளிட்ட முக்கிய பிசிசிஐ அதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறி இருந்தது. அப்போதே இனி மூத்த வீரர்களை டி20 அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற முடிவை பிசிசிஐ எடுத்தது. அதற்காக ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் கேப்டன் ஆக்கவும் முயற்சிகள் நடந்தன. இளம் வீரர்கள் பலர் இந்திய அணியில் இடம் பெற்றனர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் காயம் ஏற்பட்டது. அதன் பின் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா இல்லை என்றால் சூர்யகுமார் தலைமையில் இந்திய டி20 அணி உலகக் கோப்பையில் களமிறங்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், சூர்யகுமார் யாதவுக்கும் ஜனவரி மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் ஏற்பட்டது.
இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கிரிக்கெட் ஆட முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. அதனால் சரியான கேப்டன் இல்லாத இந்திய அணியை உலகக் கோப்பைக்கு அனுப்ப முடியாது என்ற இக்கட்டான நிலைக்கு பிசிசிஐ சென்றது. அதனால், ரோஹித் சர்மாவை டி20 அணியின் கேப்டனாக்க முடிவு செய்தது பிசிசிஐ. ஏற்கனவே, ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்று தோல்வி அடைந்ததால் அதிலிருந்து மீள வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்த ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையை வென்று கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
அதே சமயம் விராட் கோலியும் டி20 உலக கோப்பையில் கடைசியாக ஆட விரும்பினார். அதற்கு பிசிசிஐ ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விராட் கோலியுடனும், ரோஹித் சர்மாவுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் இளம் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பிசிசிஐ சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனாலும், ரோஹித் சர்மா உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் விராட் கோலி தான். அவர் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை என்றால் நானும் ஆடவில்லை என மறுத்திருக்கிறார். இதை அடுத்து இந்திய அணிக்காக இத்தனை காலம் சேவை செய்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அவர்கள் விரும்பியபடி டி20 உலக கோப்பையில் கடைசியாக ஆட வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்தது.
இதை அடுத்து ரோஹித் சர்மா விரும்பியபடி அணியை தேர்வு செய்ய முன் வந்தது பிசிசிஐ. விராட் கோலி இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பெற்றார். உலகக் கோப்பை தொடரின் முதல் 7 போட்டிகளில் விராட் கோலி 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனவும். அவரது பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் எனவும் பலரும் கூறினர்.
ஆனால், கேப்டன் ரோஹித் இறுதிப் போட்டியில் விராட் கோலி சிறப்பான இன்னிங்க்ஸ் ஆடுவார் என நம்பிக்கையுடன் கூறியிருந்தார். அதேபோல, விராட் கோலி இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தாங்கள் வாக்குறுதி அளித்தது போலவே இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை வென்று கொடுத்ததை அடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மன நிறைவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் தங்கள் ஓய்வு முடிவை அறிவித்தனர். ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் கூட அவர்கள் இருவரும் ஓய்வு பெற்றிருப்பார்கள் என்கிறது பிசிசிஐ வட்டாரம். இவர்கள் டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார்கள் என்பது ஆறு மாதத்திற்கு முன்பே பிசிசிஐ-யில் உள்ள அனைவருக்கும் தெரியும் எனவும் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours