இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 357 ரன்கள் குவித்துள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ஷுப்மன் கில், ஸ்ரேயாஷ் ஆகிய மூவரும் சதத்தை தவறவிட்டனர்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்று இலங்கை முதலில் பவுலிங்கை தேர்வுசெய்ய, அதன்படி ரோகித் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஓப்பனிங் செய்தனர். தில்ஷான் மதுஷங்க வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார்.
இதன்பின் விராட் கோலி, ஷுப்மன் கில் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசியதுடன் அரைசதமும் கடந்தனர். 6 ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்ட இருவரும் விரைவாக சதத்தை நெருங்கினர். அப்போது 92 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதேபோல், சச்சினின் 49 சத சாதனையை இன்று முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 88 ரன்களில் மதுஷங்க பந்துவீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதனால் சாதனை சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது.
இதன்பின் கேஎல் ராகுல் 21 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களுக்கும் விக்கெட்டாகி நடையைக்கட்டினர். என்றாலும் ஸ்ரேயாஷ் ஐயர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸர்களாக விளாசிய அவரால் இந்திய அணி 44.5 ஓவர்களில் 300 ரன்களை தொட்டது. அப்போது அரைசதம் கடந்திருந்த ஸ்ரேயாஷ், அதன்பின் அதிரடியாக விளையாடிய அவர் 82 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் ஜடேஜா 35 ரன்கள் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் தில்ஷான் மதுஷங்க அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
[…] […]