புதுடெல்லி: மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, “இந்தியா, நீங்கள்தான் என்னுடைய உலகம். என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து இந்த எல்லா அன்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன். மழையையும் பொருட்படுத்தாது, எங்களை கொண்டாட வெளியே வந்த உங்களுக்கு நன்றி. நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். நாம் 140 கோடி பேருமே சாம்பியன்ஸ். நன்றி மும்பை, நன்றி இந்தியா” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், ரசிகர்கள் பலரும் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். மைதானத்திலேயே அவரை ரசிகர்கள் பலரும் கேலி செய்து கூச்சலிடும் வீடியோக்கள் வைரலாகின.
இந்த நிலையில், தற்போது ஐசிசி டி20 இறுதிப் போட்டியில் ஹர்திக்கின் சிறப்பான பவுலிங் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
முன்னதாக, நேற்று மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு முடிந்ததும் மும்பை வந்தடைந்த இந்திய அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பேருந்தில் இந்திய அணி மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதிக்கு வந்தடைந்தது. அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பெரும் ரசிகர் கூட்டத்தின் நடுவே இந்திய அணி ஒருவழியாக மும்பையின் வான்கடே மைதானத்தை வந்தடைந்தது. அங்கும் ஏராளமான ரசிகர்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். பின்னர் வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
+ There are no comments
Add yours