இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு !

Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிரு போட்டிகளிலும் இடம்பெற்றிடாத முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த அணியிலும் இல்லை. அதேபோல், இன்னும் சில முக்கிய வீரர்கள் பற்றிய அப்டேட்களையும் அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கியது இங்கிலாந்து. ஆனால் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது. இப்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

தொடக்கத்தில் இந்தத் தொடரின் முதலிரு போட்டிகளுக்கான இந்திய ஸ்குவாடை தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. அதனால் இப்போது அடுத்த 3 போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலிரு போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டிருந்தபோது அந்த அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். ஆனால், சொந்த காரணங்களுக்காக அவர் அணியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மற்றொரு ஆர்சிபி வீரரான ரஜத் படிதார் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். முதல் போட்டியின்போது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் காயம் அடைந்ததால் தமிழக ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

மூன்றாவது போட்டிக்கான ஸ்குவாட் அறிவிக்கப்படுவதற்கு முன் பல எதிர்பார்ப்புகள் காத்திருந்தன. ஏனெனில், விராட் கோலி மூன்றாவது போட்டிக்கான அணிக்குத் திரும்பிவிடுவார் என்று தான் முதலில் சொல்லப்பட்டிருந்தது. அதேபோல், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படுமா, ராகுல், ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவார்களா போன்ற கேள்விகள் எழுந்தன. ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது போட்டிக்குப் பின் காயமடைந்தார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அந்த வீரர்களின் நிலை என்னவாகும் என பல கேள்விகள் இருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இந்தியாவின் ஸ்குவாடை அறிவித்தது பிசிசிஐ.

இந்த அணியிலும் விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் பங்கேற்கமால் இருக்க அனுமதி கேட்டிருக்கிறார் என்றும், அதை பிசிசிஐ மதிப்பதாகவும் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைவிட பெரிய முடிவாக இந்த ஸ்குவாடில் சீனியர் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. கடந்த இரண்டு போட்டிகளிலுமே அவர் சரியாக விளையாடவில்லை. ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்தே அவர் 48 ரன்கள் தான் அடித்திருந்தார். அதேபோல், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 27, 29 என மொத்தம் 56 ரன்கள் தான் அடித்தார். தொடர்ந்து அவர் சுமாரான செயல்பாடுகளையே கொடுத்துக்கொண்டிருப்பதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் அவர் காயமடைந்ததாக கூறப்பட்டிருந்தது. இருந்தாலும், அவர் அதிலிருந்து மீண்டு விட்டதாகவும், அணித் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரை அணியிலிருந்து கழட்டிவிடும் மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான் இருவருமே இந்த ஸ்குவாடில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் ஆடிடாத ராகுல், ஜடேஜா இருவருமே இந்த ஸ்குவாடில் இடம்பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் போட்டியில் பங்கேற்பது ஃபிட்னஸ் சோதனைக்குப் பிறகுதான் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த சந்தேகத்தின் காரணமாக வாஷிங்டன் சுந்தரும் அணியில் நீடிக்கிறார். ஒரேயொரு நேரடி மாற்றமாக முதலிரு போட்டிகளில் இடம்பெற்றிருந்த ஆவேஷ் கானுக்குப் பதிலாக, பெங்காலைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் இடம்பெற்றிருக்கிறார். அவர் இந்திய ஸ்குவாடில் இடம்பெறுவது இதுவே முதல் முறை!

கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய ஸ்குவாட்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், சுப்மன் கில்

எப்படியும் மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் யார் விளையாடுவார் என்ற கேள்வி நிச்சயம் எழும். பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும், ஒரு வாரத்துக்கு மேல் ஏற்கெனவே இடைவெளி இருந்ததால் அவர் விளையாடுவார் என்றே கருதப்படுகிறது. அதேபோல் முகேஷ் குமாருக்குப் பதில் மீண்டும் சிராஜ் களமிறங்கலாம். ராகுல் ஃபிட்டாக இருந்தால் அவர் ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ஆடலாம். இல்லையேல் சர்ஃபராஸ் கான் இந்திய அணி அறிமுகம் பெறலாம்!


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours