உலக கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது அற்புத பயணத்தை தொடங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் ஆப்கன் விளையாடி இருந்தது.
“இந்த வெற்றி அவர்களுக்கு எவ்வளவு பெரியது என்பதை வெளிநபர்கள் விளக்குவது மிகவும் கடினம். இந்த உலகக் கோப்பை தொடரில் அழுத்தம் நிறைந்த முக்கிய தருணங்களில் பெரிய அணிகளுக்கு எதிராக அவர்கள் எழுச்சி கண்டனர். அந்த வகையில் அரையிறுதியில் விளையாட ஆப்கன் தகுதி வாய்ந்த அணி தான்.
இது உலக கிரிக்கெட் தொடர் அவர்களது மகத்தான பயணத்தின் ஆரம்பம் தான். வரும் நாட்களில் பெரிய விஷயங்களை ஆப்கன் படைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் சூழலுக்கு ஏற்ப ஸ்மார்ட்டாக விளையாடுகிறார்கள்.
அவர்களுக்கு தொடக்க பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அது இந்த தொடர் முழுவதும் நம்மால் பார்க்க முடிந்தது. அடுத்த சில ஆண்டுகளில் மிடில் ஆர்டரை வலுப்படுத்தினால் உலகின் சிறந்த அணியாக இருப்பார்கள். ஐசிசி அசோசியேட் அணிகள் உத்வேகம் அளிக்கும் செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன” என பாண்டிங் தெரிவித்தார்.
இந்த தொடரில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை ஆப்கன் அணி வீழ்த்தி இருந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் குர்பாஸ் 281 ரன்களும், ஃபரூக்கி 17 விக்கெட்டுகளும் எடுத்தனர். அந்த வகையில் இந்த தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் அவர்கள் இருவரும் முன்னவர்களாக இருந்தனர்.
+ There are no comments
Add yours