நடப்பு ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 106 ரன்களில் வீழ்த்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதன் மூலம் நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் அந்த அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. டெல்லி அதிரடி தொடக்கம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், முதல் 5 ஓவர்களில் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், அபிஷேக் போரல், டேவிட் வார்னர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் மார்ஷ் மற்றும் போரல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அதன் பிறகு கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ் இணைந்து 93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
25 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய பந்த், வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அக்சர் படேலை வெளியேற்றினார் வருண். ஸ்டப்ஸ், 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த டெல்லி அணி, 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் கொல்கத்தா வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணிக்காக வைபவ் அரோரா மற்றும் வருண் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். ஸ்டார்க் 2, ரஸல் மற்றும் நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை சுனில் நரைன் வென்றார்.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் – ஃபில் சால்ட் ஓப்பனர்களாக களமிறங்கினர். சுனில் நரைன் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க, 18 ரன்களில் அவுட்டானார் ஃபில். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி – சுனில் நரைனுடன் இணைந்து விளாச 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களைச் சேர்த்தது கொல்கத்தா. ஐபிஎல் தொடரில் 10 ஓவரில் எடுக்கப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோர் இது.
7 சிக்சர்களை விளாசி 85 ரன்களை குவித்த சுனில் நரைனை 13ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் வெளியேறினார். 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்த கொல்கத்தாவின் ஸ்கோர் 195.
ஆந்த்ரே ரஸல் – ஸ்ரேயஸ் ஐயர் பாட்னர்ஷிப் அமைக்க, ரஸல் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். ஸ்ரேயஸ் தன் பங்குக்கு 2 சிக்சர்களை விளாசினார். ஆனால் 18 ரன்களில் அவரை வெளியேற்றினார் கலீல் அகமது.
ரிங்கு சிங் வந்த வேகத்தில் 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களுடன் நடையைக்கட்டினார். அடுத்த ஓவரில் ரஸல் 41 ரன்களில் போல்டானார் அதே ஓவரில் ரமன்தீப் சிங் 2 ரன்களுக்கு அவுட்.
தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 272 ரன்களைச் சேர்த்தது.
+ There are no comments
Add yours