பாரிஸ்: ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குரூப் சுற்று ஆட்டத்தில் உலக பாட்மிண்டன் தரவரிசையில் மூன்றாம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை அவர் வீழ்த்தி அசத்தி இருந்தார்.
புதன்கிழமை அன்று நடைபெற்ற குரூப்-எல் பிரிவு ஆட்டத்தில் கிறிஸ்டி உடன் விளையாடினார் லக்ஷயா. முன்னதாக, பெல்ஜியத்தின் ஜுலியன் கராகியுடன் நேர் செட் கணக்கில் லக்ஷயா வெற்றி பெற்றிருந்தார். இதனால் கிறிஸ்டி உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அவர் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் சூழல் இருந்தது. சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் 0-5 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தார் லக்ஷயா சென். அதன் பின்னர் ஆட்டத்தில் ஆர்ப்பரித்து எழுந்த அவர், அபாரமாக ஆடினார். அதன் பலனாக 8-8 என லெவல் செய்தார். முடிவில் 21-18 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.
முதல் செட்டில் கிறிஸ்டி பலமான போட்டி கொடுத்தார். இரண்டாவது செட்டில் 21-12 என வென்றார் லக்ஷயா. அதன் மூலம் ஆட்டத்தில் நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். அவர் தனது முதல் நாக் அவுட் சுற்றில் சக இந்திய வீரர் பிரனாய் உடன் விளையாட வாய்ப்பு உள்ளது. இதற்கு இன்று நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் பிரனாய் வெல்ல வேண்டும்.
ஏற்கெனவே பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து ஆகியோர் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours