தனது கால்பந்து திறமையைப் பற்றி பேசும்போது லயோனல் மெஸ்ஸி “தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக” கூறினார். கடவுளின் இந்த வரப்பிரசாதத்தை முழுமையாகப் பயன்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
திங்கட்கிழமையன்று 37 வயதை பூர்த்தி செய்த லயோனல் மெஸ்ஸி, தற்போது அமெரிக்காவில் நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை மேலும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல அழைத்துச் செல்வதற்காக முயன்று வருகிறார்.
அர்ஜென்டினா ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மெஸ்ஸி, “நான் ஏன் இப்படியாகப் பிறந்தேன் எனில் கடவுள் என்னை அப்படித்தான் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
அவர் எனக்குக் கொடுத்த பரிசே கால்பந்து திறமை. அதன் சாதக அம்சங்களை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வேன். அதிலிருந்து என்னவெல்லாம் கசக்கிப் பெற முடியுமோ அது அனைத்தையும் பெறுவேன். உண்மை என்னவென்றால், நான் பல விஷயங்களைச் செய்திருந்தாலும், இப்போது நான் இருக்கும் வீரராக மாற நான் சிறுவனாக இருந்தபோது எதையும் செய்யவில்லை” என்றார்.
ஹோம் கிளப் நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸில் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய மெஸ்ஸி, 13 வயதில் பார்சிலோனாவின் இளைஞர் அணியில் சேர்ந்தார், அவர் தான் எவ்வளவு சிறப்பு வாய்ந்த வீரர் என்பது தனக்குத் தெரியாது என்று கூறினார்.
“நான் எப்போதும் வித்தியாசமானவன். மக்கள் எனக்காக வந்து ஆட்டத்தைப் பார்த்தார்கள். அப்போதும் நான் என்னை சிறந்தவனாக உணரவில்லை. இப்போது வயதான பின்பும் கூட நான் எப்போது என்னை சிறந்தவனாக உணர்ந்தேன் என்பதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனக்கு 3 அல்லது 4 வயதாக இருந்தபோது உலகக்கோப்பை உள்ளிட்ட எந்த ஒரு கோப்பையையும் எனக்குத் தெரியாது. நான் விளையாடினேன் அவ்வளவுதான் ஏனெனில் எனக்கு கால்பந்து விளையாடுவது பிடிக்கும். எப்போதும் பந்தை உதைத்து விளையாடுவதில் தனி நாட்டம். அது என் பொழுதுபோக்கு. என்னோடு சேர்ந்து விளையாடும் ஒருவரை எப்போதும் தேடிக் கொண்டிருப்பேன்.
பல அர்ஜென்டீனர்கள் போலவே எனக்கு கால்பந்து மிகப்பிடித்தமானது. எனக்கு இது ஒரு கேளிக்கை. சிறுவயது முதல் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
2016 கோபா அமெரிக்கா தொடரில் சிலேவுடன் 4-1 என்று பெனால்டியில் தோற்றது மிகவும் வலியும் வேதனையும் நிரம்பிய தருணம். ஏனெனில், தொடர்ச்சியாக 3-வது இறுதிப்போட்டியில் இழந்திருந்தோம். இறுதி வரை அருமையாக ஆடினோம் இறுதிப் போட்டியிலும் நன்றாகவே ஆடினோம். ஆனால், பெனால்டியில் தோற்றதை ஏற்க முடியவில்லை” என்று கூறினார் லயோனல் மெஸ்ஸி.
+ There are no comments
Add yours