மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ‘இலங்கை – இந்தியா’ இடையேயான தொடரில் இருந்து தனது பணியை தொடங்குவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த தொடர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிடுக்கு கடைசி தொடர். அவர் தனது கடைசி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளார்.
இந்தச் சூழலில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இந்திய முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் அது குறித்து ஜெய் ஷா கூறியதாவது.
“அடுத்த பயிற்சியாளர் மற்றும் தேர்வாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். எங்களது கிரிக்கெட் ஆலோசனைக் குழு இதற்கான பணியை கவனித்தது. பயிற்சியாளர் பொறுப்பை கவனிக்க நேர்காணல் மேற்கொண்டு இருவரை அவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளனர். அவர்கள் சொல்பவரை அந்த பொறுப்பில் நாங்கள் நியமிப்போம்.
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக செயல்படுவார். ஆனால், புதிய பயிற்சியாளர் இலங்கை தொடருக்கு செல்லும் இந்திய அணியில் தனது பொறுப்பை ஏற்பார்” என தெரிவித்துள்ளார். தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் மற்றும் ராமன் ஆகியோரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்.
+ There are no comments
Add yours