பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில், பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில், தொடரை கைப்பற்றுவது யார் என்பதை முடிவு செய்யும் முக்கியமான 3-வது ஒருநாள் போட்டி பெர்த் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி31.5 ஓவர்களில் 140 ரன்களுக்கு சுருண்டது. மேத்யூ ஷார்ட் 22, ஜேக் பிரேசர்-மெக்குர்க் 7, ஆரோன் ஹார்டி 12, ஜோஷ் இங்லிஸ் 7, கூப்பர் கனோலி 7, ஸ்டாய்னிஸ் 9, கிளென் மேக்ஸ்வெல் 0, சீன் அபோட் 30, ஆடம் ஸாம்பா 13, ஸ்பென்ஸர் ஜான்சன் 12 ரன்கள் சேர்த்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அப்ரிடி, நசீம் ஆகியோர் தலா 3, ஹரீஸ் ரவூப் 2, ஹஸ்னைன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 141 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சலீம் அயூப் 40 ரன்கள் குவித்தார்.
அப்துல்லா ஷபீக் 37, பாபர் அஸம் 28, முகமது ரிஸ்வான் 30 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் லான்ஸ மோரீஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு கடைசியாக 2002-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை பாகிஸ்தான் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
+ There are no comments
Add yours