கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா பயணத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “இது எப்போதும் தனது நினைவில் அழகான அனுபவமாக இருக்கும்” என கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜம்மு – காஷ்மீருக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பனிப்பிரதேசத்தை பார்வையிட்டது, கிரிக்கெட் பேட் தயாரிக்கும் இடம், கோயில், படகு சவாரி, உணவு உட்கொண்டது, கிரிக்கெட் விளையாடியது என தனது சுற்றுலா அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார் அவர்.
டெண்டுல்கர் தனது பதிவில், “ஜம்மு-காஷ்மீர் எனது நினைவுகளில் பொறிக்கப்பட்ட ஒரு அழகான அனுபவமாக இருக்கும். சுற்றிலும் பனிப்பொழிவு இருந்தாலும், மக்களின் அபாரமான விருந்தோம்பலால் நாங்கள் இதமாக உணர்ந்தோம்.
நமது நாட்டில் பார்க்க நிறைய இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அதில் உடன்பட முடியவில்லை. குறிப்பாக, இந்த பயணத்துக்குப் பிறகு… காஷ்மீர் வில்லோ பேட்கள் (கிரிக்கெட் மட்டை) ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம்’ என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இவை உலகம் முழுவதும் செல்கின்றன.
இப்போது உலகெங்கிலும் உள்ள மக்களையும், இந்தியர்களையும், இந்தியாவின் வியத்தகு அம்சங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீருக்கு வருமாறு நான் பரிந்துரைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெண்டுல்கரின் இந்தப் பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அதில், “இதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது! சச்சின் டெண்டுல்கரின் அழகான ஜம்மு-காஷ்மீர் பயணம் நமது இளைஞர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்களை தெரிவிக்கிறது. ஒன்று, வியத்தகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கண்டறிதல். இரண்டாவது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதன் முக்கியத்துவம். நாம் இணைந்து, வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம்!” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
டெண்டுல்கரின் ஜம்மு – காஷ்மீர் பயண வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours