இப்போதெல்லாம் தவறான காரணங்களுக்காக பிரித்வி ஷா தலைப்புச் செய்தியாக மாறி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக்கு அவர் பெயரை விவாதிப்பதே நிறுத்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மும்பை அணியும் அவரை ரஞ்சி போட்டிகளுக்குப் பரிசீலிப்பதில்லை. நல்ல திறமைபடைத்த வீரருக்கு என்ன ஆயிற்று, அவர் பிரச்சினைதான் என்ன?
பிரித்வி ஷா பற்றி முன்னாள் வீரர் ஒருவர் சமீபத்தில் கூறியது உண்மையில் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. ஐபிஎல் ஒரு வீரரை என்ன செய்யும் என்பதற்கான விஷயம் அது. ‘23 வயதில் கையில் ரூ.40 கோடியை ஓர் இளைஞர் வைத்திருந்தால் அவர் மனநிலை எப்படி இருக்கும்?’ என்று கேட்டார் அந்த முன்னாள் வீரர். அதுதான் பிரித்வி ஷாவின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
மூன்று வடிவத்துக்குமான அதிரடி வீரர் என்றும், லாரா, சச்சின், சேவாக் கூட்டுத் திறனைத் தன்னகத்தே கொண்டவர் பிரித்வி ஷா என்றும் ரவி சாஸ்திரியும் புகழ்ந்ததை இப்போதைய பிரித்வி ஷாவை வைத்துப் பார்த்தால் வேதனை கலந்த சிரிப்புத்தான் வருகிறது.
சமீபத்தில் அவருக்கு அவரே சூட்டிக்கொண்ட முள்கிரீடத்தில் இன்னொரு நெருஞ்சி முள்ளாக இன்று தொடங்கும் விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணியில் ஷா இடம்பெறவில்லை. ஃபார்ம் மட்டுமே காரணமில்லை. ஃபார்ம் காரணமென்றால் அவருக்கு வாய்ப்புக் கொடுத்திருப்பார்கள், ஆனால் நடத்தை, ஒழுக்கம், உடல் தகுதி அவரது பிரதான பிரச்சினைகளாக இருக்கின்றன.
சமீபத்திய பிடிஐ செய்திகளின்படி, நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியின்போது தொடர்ந்து பிரித்வி ஷா மும்பை அணியின் பயிற்சி அமர்வுகளைப் புறகணித்து வந்துள்ளார். இரவு பூராவும் ஊர் சுற்றி விட்டு வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு காலை 6 மணிக்கு வருவதாக பிடிஐ குறிப்பிட்டிருந்தது.
இது கடுமையான புகார். இதுவரை மவுனம் காத்த பிரித்வி ஷா, இதற்கு மட்டும் பதிலளிக்கும் விதமாக தன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், “உங்களுக்கு முழுமையாகப் புரியவில்லை என்றால் அதைப் பற்றி பேசாதீர்கள். நிறைய பேர் முழு கருத்தையோ அபிப்ராயத்தையோ வெளியிடுகிறார்கள். அதில் பாதி உண்மை கூட இல்லை.” என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் ஹசாரே டிராபியில் அவரை எடுக்காதது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் கூறுகையில், ‘அவரது நடத்தைதான் அவரது பகைவன்’ என்று தெரிவித்துள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறியபோது, ‘பல சமயங்களில் அவரது உடல் தகுதி காரணமாக களத்தில் அவரை இறக்காமல் மறைத்து வைக்க வேண்டி நேரிடுகிறது. நடத்தையும் இல்லை, கட்டுக்கோப்பான பழக்க வழக்கங்களும் இல்லை’ என்று கூறியதும் கவனிக்கத்தக்கது.
நல்ல திறமையான வீரர் ஐபிஎல் பணமழையினால் இளம் வயதிலேயே இப்படிப் பெயர் எடுப்பது குறித்து அவரும் யோசிக்க வேண்டும், ஐபிஎல் என்ன செய்கிறது என்பதை பிசிசிஐ-யும் யோசிக்க வேண்டும்.
+ There are no comments
Add yours