பாரிஸ்: நடப்பு ஒலிம்பிக் தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு, அதாவது காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ரியோ மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பாரிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான குரூப் சுற்றில் ‘எம்’ பிரிவில் முதலிடம் பிடித்தார் சிந்து. புதன்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்டோனியாவின் கிறிஸ்டின் உடன் விளையாடி இருந்தார். இதில் 21-5, 21-10 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். முன்னதாக, மாலத்தீவின் ஃபாத்திமா உடனான குரூப் சுற்று போட்டியிலும் சிந்து வெற்றி பெற்றிருந்தார். இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஏற்கெனவே ஆடவருக்கான பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தது. தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு சிந்து முன்னேறியுள்ளார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறும் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் சீனாவின் ஹி பிங்க் ஜா உடன் சிந்து பலப்பரீட்சை செய்ய உள்ளார். இவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் குரூப் சுற்று போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீரர்கள் பிரனாய் மற்றும் லக்ஷயா சென் ஆகியோர் தனித்தனியாக விளையாட உள்ளனர்.
+ There are no comments
Add yours