லாகூர்: அண்மையில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்துள்ளார்.
“அணியில் கேப்டனின் பங்கு முக்கியமானது. கேப்டனின் உடல் மொழி அணியின் உடல் மொழியாக மாறுகிறது. கேப்டன் என்பவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதற்கு உதாரணமாக ரோகித் சர்மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ஆட்டம், விளையாடும் பாணியையும் பார்க்க வேண்டும்.
பாகிஸ்தானில் அடிமட்ட அளவிலான கிரிக்கெட்டை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த வீரர்கள் கிடைப்பார்கள். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் தனது கவனத்தில் எடுத்துக் கொள்வார் என கருதுகிறேன். அந்த வகையில் அவர் என்ன வகையான மாற்றம் மேற்கொள்ள உள்ளார் என்பதை பார்க்க காத்துக் கொண்டுள்ளேன். எது எப்படி இருந்தாலும் அணியை நான் எப்போதும் ஆதரிப்பேன். இந்த மாற்றங்கள் நேர்மறையானதாக அமைய வேண்டும்” என ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடர், அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் என இரண்டிலும் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென அந்த நாடே விரும்பும்.
+ There are no comments
Add yours