நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதலில் பேட் செய்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. அந்த அணி முதல் விக்கெட்டை 64 ரன்கள் எடுத்திருந்த போது இழந்தது. ஷெபாலி வர்மா மற்றும் மெக் லேனிங் இணைந்து முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்திருந்தனர். ஷெபாலி, 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதே ஓவரில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலைஸ் கேப்ஸி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அவர்கள் மூவரின் விக்கெட்டையும் சோஃபி மோலினக்ஸ் கைப்பற்றி இருந்தார். ஆர்சிபி அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனை கொடுத்த ஓவர் அது. அதன் பிறகு தொடர்ச்சியாக டெல்லி அணி விக்கெட்டை இழந்தது. ஆர்சிபி அணியின் ஷ்ரேயங்கா மற்றும் ஆஷா ஷோபனா ஆகியோரும் சிறப்பாக பந்து வீசி விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி அணி விரட்டியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். அதிரடியாக ஆடி விக்கெட்டை இழக்க வேண்டாம் என நிதானமாக இன்னிங்ஸை அணுகினர். சோஃபி டிவைன் 32 ரன்களிலும், ஸ்மிருதி 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தும் மறுமுனையில் ஆடிய எல்லிஸ் பெர்ரி பொறுப்புடன் ஆடினார்.
ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. அந்த ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் ரிச்சா கோஷ் மற்றும் பெர்ரி என இருவரும் ஒற்றை ரன் எடுக்க மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார் ரிச்சா. இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. எல்லிஸ் பெர்ரி, 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ரிச்சா, 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
+ There are no comments
Add yours