கான்பூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். மேலும் “எனது சொந்த நாட்டில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “டி20 உலக கோப்பைதான் என்னுடைய கடைசி டி20 ஆட்டம். இது தொடர்பாக நான் தேர்வுக்குழுவுடன் பேசி தான் இந்த முடிவை எடுத்தேன். 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது ஓய்வு அறிவித்துள்ளேன். பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு சிறப்பான ஒருவரை தேர்வு செய்யும்” என்றார். டி20 போட்டிகளில் வங்கதேச அணிக்காக ஷகிப் இதுவரை 129 போட்டிகளில் விளையாடி 2551 ரன்களைச் சேர்த்துள்ளார்.
தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் பயணம் குறித்து அவர் கூறுகையில், “அடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அதில் பங்கேற்பது குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இது என்னுடைய சொந்த நாட்டில் நடக்கும் போட்டி. கடைசி டெஸ்ட் தொடராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அங்கே நடக்கும் சம்பவங்கள் எதுவும் சரியாக இல்லை. இது குறித்து டெஸ்ட் கிரிக்கெட் வாரியத்திடம் பேசியுள்ளேன். அவர்கள் உரிய பாதுகாப்பு கொடுத்தால் நான் விளையாடுவேன். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தான் என்னுடைய கடைசியாக இருக்கும்” என்றார்.
ஷகிப் அல் ஹசன் மீதான வழக்கும் சொந்த நாடு செல்வதில் உள்ள பயமும்: கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற உள்நாட்டு போராட்டங்களில் நடந்த கொலை வழக்கில் ஷகிப் அல் ஹசன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ரபீகுல் இஸ்லாம் என்பவரை கொலை செய்ததாக கூறி அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷகிப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவர் வங்கதேசம் சென்றால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் நாடு திரும்புவது குறித்து யோசித்து வருகிறார்.
“வங்கதேசம் செல்வது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அங்கிருந்து மீண்டும் திரும்புவது தான் சிக்கலானது. என்னுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர் என்னுடைய பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் எனக்கு ஃபேர்வெல் அளிக்கும் வகையில் கிரிக்கெட் அணி நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளித்தால் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த ஊரில் விளையாடுவேன். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தான் என்னுடைய கடைசி டெஸ்ட்” என ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷகிப், 4453 ரன்களும், 242 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு எதிரான வங்கதேசத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (செப்.27) கான்பூரில் தொடங்குகிறது.
+ There are no comments
Add yours