T20 உலகக்கோப்பை கிரிக்கெட்: உகாண்டாவின் மோசமான சாதனை. கேப்டன் விளக்கம்.

Spread the love

கயானா: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – சி’ ஆட்டத்தில் உகாண்டா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடின. இதில் 39 ரன்களில் ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளது உகாண்டா. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் தெரிவித்தது.

“இந்த நாள் எங்களுக்கு கடினமானதாக அமைந்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த தோல்வி எங்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. பேட்டிங் யூனிட்டாக நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்ற புரிதலை பெறுவது அவசியம்.

எங்கள் அணியின் பந்து வீச்சு நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது. அதனை நாங்கள் வலுப்படுத்த வேண்டும். அது கொஞ்சம் சவாலான காரியம் தான். நாங்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வலுவான அணிகளுடன் விளையாட வேண்டியது அவசியம். இதனை நாங்கள் இந்த தொடரில் பெற்றுள்ளோம். எங்கள் அணியின் ரசிகர்களை நேசிக்கிறோம். அனைத்து நேரத்திலும் அவர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்” என உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா தெரிவித்தார்.

கயானாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. சார்லஸ் 44, பூரன் 22, பவல் 23, ரூதர்ஃபோர்ட் 22, ரஸல் 30 ரன்கள் எடுத்தனர்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை உகாண்டா விரட்டியது. அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்டை இழந்து வந்தது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் எல்பிடபிள்யூ மற்றும் போல்ட் ஆகி இருந்தனர். குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகளின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹுசைன் சுழலில் ஆட்டம் கண்டனர். அவர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 12 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது உகாண்டா.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டான அணி என்ற மோசமான சாதனையை உகாண்டா சமன் செய்துள்ளது. முன்னதாக, கடந்த 2014-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 39 ரன்களுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours