நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் – ஏ’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரை ஷாஹீன் ஷா அப்ரிடி வீசினார். அதில் 8 ரன்கள் எடுத்தார் ரோகித்.
அதன் பிறகு மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. நசீம் ஷா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 13 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரில் ரோகித் ஆட்டமிழந்தார். அவரை அப்ரிடி வெளியேற்றினார்.
பின்னர் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் 20 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா வெளியேற்றினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் சூர்யகுமார் யாதவை 7 ரன்களில் அவுட் செய்தார் ஹாரிஸ் ரவூஃப். ஷிவம் துபே, 3 ரன்கள் எடுத்து நசீம் ஷா வசம் விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது ஆமீர் வீசிய 15-வது ஓவரில் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். பந்த், 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ஜடேஜா, டக் அவுட் ஆனார். அந்த ஓவர் பாகிஸ்தானுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.
18-வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்று ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்கள் எடுத்திருந்தார். அவரை ஹாரிஸ் ரவூஃப் வெளியேற்றினார். அடுத்த பந்தில் பும்ராவை டக் அவுட் செய்தார். 19 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. அர்ஷ்தீப் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார். 120 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டுகிறது.
+ There are no comments
Add yours